ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல்
தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ள ஓர் ஆஞ்சநேயர் கோயில்நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலகப் புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இக் கோயில் விஷ்ணுவின் ஓர் அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்கு காட்சியளித்த இடமாக உள்ளது. இங்கு "ஸ்ரீ வைகானச" ஆகம முறை பின்பற்றப்படுகிறது. 1996-ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000-ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. இக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது.